சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட மாதம் 13ஆம் திகதி இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்நாளில் இடக்கை பழக்க முள்ளவர்கள் கௌரவிக்கப் படுகிறார்கள். நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம்.
உலக மக்களில் நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வலதுகைப் பழக்கம் இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன.
இடதுகைப் பழக்கம் பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர்- ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ- லியனார்டோ டாவின்ஸி- விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்க்ளின்- புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்- டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா- நடிகை மர்லின் மன்றோ- அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் – பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் -
இங்கிலாந்து அரசர் வில்லியம் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஹொலிவூட் நடிகை அன்ஜலினா ஜோலி அமெரிக்க ஹொலிவூட் நடிகர் டொம் குரூஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஹொலிவூட் நடிகை ஜுலியா ரொபர்ட்ஸ் கனடாவைச் சேர்ந்த போப் பாடகர் ஜஸ்டின் பீபர் அமெரிக்க போப் பாடகர் எமினெமி இங்கிலாந்து இளவரசி விக்டோரியா இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் லியனார்டோ டாவின்சி மேலும் ஒரு சிறப்புப் பெறுகிறார். பொதுவாக வலக்கையாலே கண்ணாடி பிம்பம் போல எழுதுவது கடினம். ஆனால் டாவின்சியோ கண்ணாடி பிம்பம் போல இடது கையால் எழுதும் ஆற்றல் பெற்றவராம்.
பொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும் மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக் கட்டுப்படுத்துகின்றன.
மூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு? மூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும்.
மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான் நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விடயமாக உள்ளது.
1648ம் ஆண்டு தோமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் Vulgar Errors என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார்.
இடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப் பிரித்தார்.
இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும் பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார்.
மெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns) பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றை விட ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்! நரம்புக் கோளாறுடைய குழந்தைகள் பெரும்பாலோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகள் பெரும்பாலோர் பிறப்பு காலத்தில் டிரோமா (Birth Trauma) ) என்ற தாக்குதலுக்கு உட்படுவதாக பாகான் (Bakan என்ற மருத்துவர் கூறுகிறார்.
இடக்கைப் பழக்கமுடையோரை வலக்கைப் பழக்கத்திற்கு மாற்றினால் சிலருக்குத் திடீர் என திக்குவாயாக மாறிட வாய்ப்பு உள்ளதாம். உதாரணம்: இங்கிலாந்தை ஆண்ட ஆறாம் ஜோர்ஜ் மன்னர்.
பெரும்பாலான பொருட்கள் வலக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்தக் கூடியன வாகவே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் சில வெளிநாடுகளில் கத்திரிக்கோல்- கோல்ஃப் விளையாட்டு விளையாடப் பயன்படும் மட்டை போன்ற பொருட்கள் இடக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்த ஏதுவாகவும் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment