பசுமை பிள்ளையார்கள்!


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மதுரை அருகேயுள்ள விளாச்சேரியில் பசுமை பிள்ளையார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இறைவனை காண வேண்டுமா? விளாச்சேரி வாங்க..! விளாச்சேரி, மதுரை திருப்பரங்குன்றத்திற்கு அருகில் இருக்கும் அழகிய கிராமம். நாம் விநாயகர் சதுர்த்திக்கு வாங்கி வழிபடும் 6 இன்ச் முதல் 60 இன்ச்க்கும் அதிகமான உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் இங்கு செய்யபடுகிறது. இந்த ஊரில் திரும்பிய திசை எல்லாம் விநாயகர் சிலைகள் தான். கூட்டாஞ்சோறு விளையாடும் குழந்தைகள் முதல் வெற்றிலை இடிக்கும் பாட்டி வரை எல்லோருடைய மடியிலும் விநாயகர் அமர்ந்திருக்கிறார். ஆனி மாதம் ஆரம்பத்திலிருந்து இந்த விநாயகர் சிலைகளின் தொடர் வருகையால் விளாச்சேரி,"விழாச்சேரி'யாக மாறியிருக்கிறது.

விளாச்சேரியில் செய்யபடும் விநாயகர் சிலைகளுக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால், மாசு கட்டுபாடு வாரியத்தின் ஆணைப்படி, ஆணை முகத்தானுக்கு, சுற்றுசூழலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருட்களால் உருவம் கொடுக்கின்றனர் இந்த ஊர் மக்கள்.



இங்கு சுமார் 20 வருடங்களாக சிலை செய்து வரும் பிச்சையிடம் பேசுகையில், ''விளாச்சேரியில் சுமார் 150 குடும்பங்கள் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பேப்பர் பல்ப் போன்ற பொருட்களை உபயோகிக்காமல் மாசு கட்டுபாடு வாரியத்தின் உத்தரவுப்படி களிமண் கொண்டெ சிலைகள் செய்யபடுகிறது. களிமண்னோடு மணல் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் மாட்டு சாணத்தையும் சேர்த்து இச்சிலைகள் செய்யபடுகிறது.

3 முதல் 7 அடி வரை உள்ள சிலை ஓன்று செய்ய சுமார் 10 நாட்கள் ஆகும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்படும் சிலைகளை ஒப்பிடும்போது களிமண்னால் செய்யப்படும் சிலைகள் எடை அதிகமுள்ளதாகவும், விலை சற்று கூடுதலாகவும் இருக்கும். பெரிய விநாயகர் சிலைகள் அடிக்கு சுமார் ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யபடுகிறது. சிலைகளுக்கு வண்ணமும், எனாமல் பெயிண்ட்டை தவிர்த்து வாட்டர் கலர் பெயிண்டை கொண்டே பூசப்படுகிறது. இந்த பெரிய விநாயகர் சிலைகள் செய்ய மோல்டு பயன்படுத்தப்படுவதில்லை. ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை விட விலை கூடுதலாக இருந்தாலும், சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத காரணத்தினாலும், முழுக்க கை வேலைப்பாடுகள் என்கின்ற காரணத்தினாலும், மேலும் மண்னில் செய்து வழிப்படுவது தான் ஐதீகம் என்பதாலுமே மக்கள் விரும்பி வாங்குகின்றனர்" என்றார்.



சுரேஷ் என்பவர் கூறுகையில், ''சிறிய சிலைகளில் சுட்ட விநாயகர், சுடாத விநாயகர் என இரு வகை உண்டு. அதாவது, சிலைகளை சூளையில் சுட்டு செய்வது சுட்ட விநாயகர் சிலைகள்; சுடாமல் வெயிலில் காய வைத்து செய்வது சுடாத விநாயகர் சிலைகள். சிறிய விநாயகர் சிலைகள் ரூ.50, ரூ.30, ரூ.10 மற்றும் ரூ.6 என விற்பனை செய்யபடுகிறது. ஒரு நாளைக்கு முக்கால் அடி சிலை 40 செய்யலாம்" என்றார்.

விநாயகர் சிலைகள் மட்டும் அல்லாது நவராத்திரி கொழு பொம்மைகளும், கிறிஸ்துமஸ் பொம்மைகளும் இங்கு செய்யபடுகிறது. விளாச்சேரி எங்கும் இறைவன் இருக்கிறான் என்று சொன்னதற்கான காரணம், ஊர் முழுவதும் பரந்து கிடக்கும் சிலைகளால் மட்டும் அல்ல, நம் சுற்றுசூழலுக்கு தம்மால் எந்தவொரு கேடும் ஏற்பட்டு விடக்கூடாது என நினைக்கும் மனங்களாலும் தான்.

நன்றி : விகடன்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment