தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்படி வெற்றிகரமாக இயங்குகின்றன என்பதைப் பார்வையிடுவதற்காக ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு குழு சென்னை வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுக்க 6823 கடைகளைத் திறந்து வைத்துள்ளது.
பீர், விஸ்கி, பிராந்தி என விதம் விதமான மது வகைகள் இந்தக் கடைகளில் கிடைக்கிறது. பெண்களையும் மது அருந்த "ஊக்குவிக்கும்" வகையில் ஷாப்பிங் மால்களிலும் கடைகளைத் திறந்து வைத்துள்ளனர். இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் வந்து சரக்கு வாங்கி்ச் செல்வதைக் காண முடிகிறது.
மதுக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 21,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. தற்போது விலையை வேறு ஏற்றி வி்ட்டதால் இந்த வருமானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஒடிசா அரசு அதிகாரிகள் அடங்கிய குழு சென்னைக்கு வந்துள்ளது.
சென்னையில் நேற்று இந்த குழு சில கடைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் பார்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்வையிட்டனர்.
சில குடிகாரர்களையும் சந்தித்து நீங்க எப்படி குடிக்கிறீங்க, உங்களுக்கு எந்த விதமான சரக்கெல்லாம் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களயும் கேட்டறிந்தனர்.
மேலும் எந்த முறையில் மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்கிறார்கள்? எத்தனை விதமான மதுபான ரகங்களை விற்பனை செய்கிறார்கள்? அந்த மதுபானங்களை கடைகளில் எப்படி விநியோகம் செய்கிறார்கள்? எந்த வகையில் விற்பனை செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக இவர்கள் வந்துள்ளனர்.
இனிமேல் தமிழகத்தைப் போல மது விற்று அதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டும் மாநிலங்கள் வரிசையில் ஒடிசாவும் இனி தலைநிமிர்ந்து நிற்கும் என்று எதிர்பார்க்கலாம்!

0 comments:
Post a Comment