ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மரபுரிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் 12 ஆம் நூற்றாண்டு காலத்து சிற்பத்தினை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளது. இருந்தபோதிலும் அதனை மீளளிக்க முடியாது என்று கனடா தெரிவித்துள்ளது.
குறித்த சிற்பத்தினை தாம் பேணிப் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ள கனடா மரபுரிமை திணைக்களம்- அதனை இந்தியாவிடம் மீள ஒப்படைக்க வேண்டிய கடப்பாடுகள் எவையும் தமக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆளளவு உயரமுடைய வலது தோளில் கிளியை தாங்கியிருக்கும்பெண் ஒருவரை சித்தரிக்கும் அந்த கற்சிலை 2011 ஆம் ஆண்டில் இருந்து கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள மரபுரிமை நிலையத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும் அந்த சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்டமைக்கான ஆதாரத்தினை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தினால் நிரூபிக்க முடியாமையாலும் அந்த சிலை திருடப்பட்டதான முறைப்பாடுகள் எவையும் இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்படாமையாலும் அதனை தாம் இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என கனேடிய மரபுரிமை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கஜுராஹோ உலகப் பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவினால் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்தே இந்த சிற்பம் கனடாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த சிற்பத்தின் நிழற்படங்கள் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்களிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த சிற்பம் எவ்வாறு கனடாவைச் சென்றடைந்தது என்பதனை எவராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கஜுராஹோ வட்டாரம் போபால் நிர்வாக எல்லைக்குள் வருவதனால் அந்த பகுதி அதிகாரிகளிடமே இந்த சிலையின் படம் முதலில் கையளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து இவ்வாறான சிலைகள் எவையும் திருடப்பட்டதான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கவில்லை என போபால் தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
கனடாவின் கலாச்சார சொத்துக்கள் தொடர்பிலான ஏற்றுமதி இறக்குமதி குறித்த 1977 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் அந்த சிலை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதனை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவ்வாறான உறுதிப்பாடுகளை இந்திய அதிகாரிகளினால் மேற்கொள்ள முடியாதுள்ள நிலையில் குறித்த அந்த சிலையினை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் கனேடிய அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

0 comments:
Post a Comment