ஈராக், எகிப்து ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ISIS அமைப்பின் இலட்சினைகளுடன் T-shirts அணிந்து புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பிரசூரித்த தமிழகத்தில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ISIS என்ற சன்னி முஸ்லிம் பிரிவினர் ஈராக்கிலும், எகிப்திலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என ஆயுதப் போராட்டம் நடத்திய வருகின்றனர். இந்த நிலையில், இந்த அமைப்பினர் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்துவதாக விமர்சனங்களும் உள்ளன.
கைதுசெய்யப்பட்ட தமிழக மாணவர்களிடையே பொலிஸார் விசாரணை நடத்தியபோது, ISIS அமைப்பினர் வசமிருந்த இந்திய தாதியர் 46 பேரை கடந்த மாதம் அந்த அமைப்பினர் விடுத்து, பாதுகாப்பாக அனுப்பிவைத்திருந்தமை கொண்டாடுவதற்காகவே இவ்வாறு மேற்சட்டை அணிந்து புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பிரசுரித்ததாக குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ISIS என்ற அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்படவில்லை எனவும், இந்த இளைஞர்கள் ISIS அமைப்பின் இலச்சினையைப் பொறித்த மேற்சட்டைகளை அணிந்து அவர்களுக்கு ஆதரவை மாத்திரமே தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த இளைஞர்களுக்கும், ISIS அமைப்பினருக்கும் எவ்வித நேரடி தொடர்புகளும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தோண்டி என்ற கிராமத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், இந்தப் புகைப்படம் பிரசுரமாகி ஒருவார காலத்தில் குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், இவர்கள் இருவருமே மேற்சட்டையை அச்சிட்டு சக நண்பர்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தப் புகைப்படம் வெளிநாட்டில் இருந்து தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட ஒரு இளைஞர் தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா வீசாவில் சென்றுவந்துள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் இம்மாத முதல்வாரத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், மும்மையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் ISIS அமைப்பில் அண்மையில் இணைந்துகொண்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மகாராஷ்டா காவல்துறையினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலக நாடுகள் மத்தியில் ISIS அமைப்பு, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக கருதப்படுவதால், முஸ்லிம் இளைஞர்கள் இவர்களுக்கான ஆதரவை பகிரங்கமாக வெளியிட்டு தேவையற்ற நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ISIS இலட்சினைகளுடன் T-shirts அணிந்து புகைப்படம் வெளியிட்ட இரு தமிழக இளைஞர்கள் கைது!
ReplyDelete