ஜி.பி ஸ்டுடியோ சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ், செல்வகுமார் தயாரிக்கும் படம், ‘மேகா’. ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் வெளியிடுகிறது. அஸ்வின், சிருஷ்டி டாங்கே, அங்கனா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.பி.குருதேவ். இசை, இளையராஜா. கார்த்திக் ரிஷி இயக்கியுள்ளார்.
இந்தப்படம் பற்றி இளையராஜா கூறியதாவது:இந்தப் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனால் சிறப்பான பின்னணி இசை கொடுக்க முடிந்தது. எத்தனையோ மோசமான படங்களுக்கு வேலை செய்திருக்கிறேன். ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட பல படங்களை, 4 முறை பார்த்திருக்கிறேன்.
ரீ&ரெக்கார்டிங் செய்யும்போது, ஒரு படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியிருக்கிறது என்றால், என்னைப் போன்ற பொறுமைசாலி யாராவது இருக்க முடியுமா? பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தை காட்டியபோது, அன்றைக்கு இருந்த மனநிலையில், படம் பிடிக்கவில்லை என்றேன்.
கிளைமாக்ஸ் ரீல், ரீ&ரெக்கார்டிங் செய்தபோது, இப்போது வந்து பார் என்றேன். பார்த்துவிட்டு என் கைகளைப் பிடித்த பாரதிராஜா, ‘உனக்குப் பிடிக்காத படத்துக்கே இவ்வளவு சிறப்பாக ரீரெக்கார்டிங் செய்திருக்கிறாயே’ என்று சொன்னார்.
அது அப்படித்தான். என் இசை சரஸ்வதி. அவளது அருளால் சப்தஸ்வரங்களும் நான் அழைத்தவுடன் வருகிறது. எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது வேறு. அது என் சொந்த விஷயம். ஆனால், என்றைக்குமே தொழிலுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். ‘மேகா’ படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். படக் குழுவினர் உடனிருந்தனர்.

0 comments:
Post a Comment