பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணத்தில் சந்தேகம் உள்ளதை தொடர்ந்து சி.பி.ஐ விசாரணைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஜியா கான்(25), மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஆண்டு யூன் மாதம் 3ம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, அவர் இறந்த 6 நாட்களுக்குப் பிறகு அவர் எழுதிய கடிதத்தை அவரது பெற்றோர் பொலிசில் அளித்துள்ளனர்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் அவரது காதலரும் வளர்ந்து வரும் நடிகருமான சூரஜ் பஞ்சோலியை பொலிசார் கைது செய்து, தற்கொலைக்கு ஜியா கானை தூண்டியதாக கடந்த சனவரி மாதம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ஜுஹு பகுதி பொலிசார் விசாரணை நடத்திவந்த நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று ஜியா கானின் தாயார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது, மும்பை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, நேற்று ஜியா கானின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மும்பை நீதிமன்றம் இந்த மரணம் தற்கொலையா, கொலையா என்று விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment