சென்னையில் இன்று நடந்த அதிமுகவினர் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஜெயலலிதா பேசியதாவது, வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கையில் முன்னேறும் போது பல தடைகள் வரலாம். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். எனவே மனந்தளராமல் தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய மனப்பாங்கினை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். வாழ்க்கை என்றால் அதில் தொல்லை இருக்கும்; கவலை இருக்கும்; இவற்றிக்கு இடையே இன்பமும் இருக்கும்.
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர், தனது அமைச்சரையும், சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மன்னரின் கூரிய போர்வாள், அவருடைய கையின் கட்டை விரலை துண்டித்தது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இருந்த மன்னர், தன் விதியை நொந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த அமைச்சர் "எல்லாம் நன்மைக்கே" என கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த வார்த்தையைக் கேட்ட உடன் மன்னருக்கு கோபம் வந்தது. தன்னுடைய வீரர்களை அழைத்து, "அமைச்சரை கைது செய்யுங்கள்! விடியும் வரை சிறையில் அவரை, தலைகீழாக தொங்க விடுங்கள்! பின்னர் நாளை காலை தூக்கில் இடுங்கள்!" என்று கட்டளையிட்டார்.
அந்த சமயத்தில், காட்டுவாசிகள் சிலர் தெய்வத்திற்கு நரபலியிட வேண்டி, ஒரு மனிதனை தேடினர். அவர்கள் கண்ணில் மன்னர் அகப்பட்டார். அவர்கள் மன்னரை சிறைபிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். நரபலியிடத் தயாராகும் நேரத்தில், மன்னரின் கை கட்டை விரல், துண்டிக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். அடிபட்ட ஒருவரை அங்கஹீனம் உள்ள ஒருவரை நரபலியிடுவது முறையல்ல என்று கூறி மன்னரை விடுவித்தனர்.
உடனே மன்னருக்கு ‘எல்லாம் நன்மைக்கே', என்ற அமைச்சரின் வார்த்தை நினைவிற்கு வந்ததையடுத்து அவரை விடுதலை செய்ய சொன்னதுடன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்னைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும்.
அதனை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment