திருவண்ணாமலை செய்யாறு தனி சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கை வாலிபர் கிருஷ்ணலிங்கம் தனது காதலியை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.
செய்யாறு தனிசிறப்பு முகாமில் இந்தியாவில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 இலங்கை வாழ் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையை சேர்ந்த கிருஷ்ணலிங்கம் (35) என்பவர் கடந்த 2009ம் ஆண்டு 5 வழக்குகளில் செங்கல்பட்டு தனிசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு தற்போது செய்யாறு தனிசிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணலிங்கம், இலங்கையில் உள்ள அவருடைய மாமன் மகள் வசந்தமலர் (32) என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, வசந்தமலரை திருமணம் செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழக அரசிடம் கிருஷ்ணலிங்கம் மனு செய்துள்ளார்.
இதற்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, வசந்தமலர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து செய்யாறு தனிசிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணலிங்கத்தை அரசின் அனுமதியுடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்துள்ளனர்.
அங்கு மணக்கோலத்தில் காத்திருந்த வசந்தமலர், கிருஷ்ணலிங்கம் வந்ததும் உறவினர்கள் முன்னிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்துள்ளது.
பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டதுடன், 1 மணிநேரத்தில் மீண்டும் கிருஷ்ணலிங்கம் தனிசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், மணமகள் மற்றும் உறவினர்கள் சென்னை பல்லாவரத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

0 comments:
Post a Comment