தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் தீ விபத்துச் சம்பவ வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பாக, 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எனினும், சம்பவத்திற்கு பொறுப்பானதாகக் குற்றஞ்சுத்தப்பட்டிருந்த 8 அதிகாரிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மனவேதனையையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக பலியான குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 2004ஆம் ஆண்டு யூலை 16ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.
இந்த தீ விபத்து தொடர்பாக 24 பேரை கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தீ விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் திகதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர். 22 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த 17ம் திகதியுடன் முடிவடைந்தது.
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி, 11 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். அதே நேரத்தில், 10 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment