ஆஸ்கர் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணத்துக்கு, நடிகர் கமல் ஹாஸன், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராபின் வில்லியம்ஸ் மரணம் குறித்து கமல் ஹாஸன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
நகைச்சுவை நடிகர்கள்தான் இந்த சமூகத்தின் மிகச் சிறந்த விமர்சகர்கள். தங்கள் கோபத்தை நகைச்சுவை எனும் முகமூடிக்குள் மறைத்துக் கொண்டவர்கள். தொடர்ந்து அப்படி கோபத்தை அடக்குவதாலேயே மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
மிக எளிதில் கண்ணீர் சிந்தும் இயல்புடையவர் ராபின் வில்லியம்ஸ். அதை அவரது படங்களில் பார்க்கலாம். அமெரிக்க ஹீரோக்களுக்கு திரையில் கதறி அழும் காட்சிகளே பிடிக்காது. அமெரிக்கர்களின் மனநிலையை மாற்றியது வியட்நாம் போர். வேதனை, பயத்தில் திரையில் கதறியழுது காட்டியவர் ராம்போ எனும் ஆக்ஷன் ஹீரோதான். ஆண்களின் அழுகைக்கு கண்ணியம் தேடித் தந்தவர் ராபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காக அவரை எனக்குப் பிடிக்கும்.
செய்திகளில் வருவதுபோல, அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டிருந்தால், தனது முடிவு தேதிக்கு முன்பே வாழ்க்கையை முடித்துக் கொண்ட அவரை வெறுக்கிறேன். அவரைப் போன்ற திறமையானவர்களிடம் நான் இந்த முடிவை எதிர்ப்பார்க்கவில்லை. இது எனது சக இந்திய ஹீரோ குருதத்துக்கும் பொருந்தும்!
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர், நகைச்சுவைக் கலைஞர் ராபின் வில்லியம்ஸின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர், நகைச்சுவைக் கலைஞர் ராபின் வில்லியம்ஸின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 63 வயதான ராபின் வில்லியம்ஸ் உடல் தெற்கு கலிஃபோர்னியாவின் டிபூரனில் உள்ள இல்லத்தில் மீட்கப்பட்டது.
இது மரணமா.. தற்கொலையா என்பதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திங்கள் கிழமை முற்பகல் 11:55 மணிக்கு அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு வைத்தியர்கள் தெரிவித்துவிட்டனர்.
ராபின் வில்லியம் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சமீப காலமாக மன அழுத்த பாதிப்புக்கு உள்ளான ராபின் வில்லியம்ஸ், கடந்த 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹான்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர்.
அப்படத்தில் ராபின் வில்லியம்ஸ் மனக் கோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக நடித்தது குறிப்பிடத்தக்கது.
"என் கணவர் - சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என்று ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' படத்துக்கு மூலமாக விளங்கியது. ராபின் வில்லியம்ஸின் மிஸஸ் டவுட்பயர் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூலமும் ராபின் வில்லியம்ஸின் 'பேட்ச் ஆடம்ஸ்'எனக் குறிப்பிடப்படுகிறது.
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த 'நைட் அட் தி மியூஸியம்', 'ஜூமான்ஜி', 'ரோபோட்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ்.

0 comments:
Post a Comment