இன்றைய அவசர உலகில், பெரும்பாலானவர்கள் உணவிற்கும், உறக்கத்திற்கும் சரியான நேரம் ஒதுக்குவதே கிடையாது. எப்போதும் கணினியையும், திறன்பேசிகளையும் கையில் வைத்துக் கொண்டு, உணவு மறந்து, உறக்கம் மறந்து நட்பு ஊடங்களில் நம் ஒட்டுமொத்த நேரத்தையும் செலவழித்து வருகின்றோம்.
இன்றைய காலத்தில், பெரும்பாலான இளைஞர் நேரத்திற்கு உணவு உண்பது கிடையாது. இரவு நெடுநேரம் விழித்திருந்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டு தமது உயிருக்கு தாமே எமனாகின்றனர்.
இன்றைய நாகரீக உலகில் நம்மில் எத்தனைப் பேர் காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்கிறோம்?
காலை உணவு (breakfast) என்பதன் பொருள் 'விரதத்தை கலைத்தல்' என்பதாகும். அதாவது 'Breaking fast' என்பதன் சுருக்கமே Breakfast என்று கூறப்படுகின்றது. இரவில் சுமார் 8 முதல் 10 மணி நேரம் உறங்கி எழும்போது, முதல் நாளிரவு உண்ட உணவனைத்தும் செரிமானம் ஆகி வயிறு காலியாக இருக்கும்.
அந்த நேரத்தில், நமது குடலும் செரிமான உறுப்புகளும் முழுமையான இயக்கத்தில் இருக்காது. எனவே காலை உணவாக குளிர்ச்சியான பழச்சாறு, நீராகாரம், எளிதில் செரிமானமாகும் உணவு போன்றவற்றை உட்கொண்டு சிறிது சிறிதாகத்தான் உடலுறுப்புகளை இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக காலை வேளையில் அதிகக் கொழுப்புள்ள, எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த கொழுப்பை செரிமானமடையச் செய்ய உடல் உள் உறுப்புகள் அதிகப்படியான ஆற்றலைச் செலவழிக்க வேண்டியேற்படும். எடுத்த எடுப்பிலேயே கொழுப்பு உணவை உட்கொண்டு உடலுக்கு கேடு விளைவிப்பதை விட, நன்கு கடைந்த சத்துள்ள மோர் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை அடையலாம்.
மோர் அருந்துவதால் பல நன்மைகள் உண்டாகும் என்பதைப் பலரும் அறிவதில்லை. செரிமானத்துக்கு ஏற்றது மோர். மேலும், வயிற்று உபாதைகளுக்கும், வயிற்று உப்புசத்திற்கும், வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கும் மோர் சிறந்த பானம்.
அவ்வகையில் மோர் காலை உணவிற்கு சிறந்தப் பானமாக திகழ்கின்றது. மோர் செய்வதன் வழிமுறைகளை கீழே காணலாம்:-
தேவையானவை:-
- ஒரு கோப்பை கடைந்த தயிர்
- மூன்று கோப்பை தண்ணீர்
அரைப்பதற்கு:
- ஒரு நெல்லிக்காய்
- ஒரு பச்சைமிள்காய்
- மாங்காய் சிறு துண்டு
- கறிவேப்பிலை சிறிது
- இஞ்சி சிறு துண்டு
- அரைக்கட்டு கொத்தமல்லித்தழை
- உப்பு
- பெருங்காயத்தூள்
- சிறிய எலுமிச்சை
செய்முறை:-
அரைப்பதற்கு உரிய பொருட்களை சிறிது தண்ணீர்விட்டு அரைத்த பின்பு உப்பு, பெருங்காயத்தூள், தயிர், தண்ணீர்விட்டு நன்கு கடைந்து பின் வடிகட்டவும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவித விட்டமின் சத்துக்களும் இதில் சேர்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இந்த மோர் உதவும்.
ஆகவே, செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவருமே காலை உணவாக இந்த மோரை அருந்தி ஆரோக்கியமாக வாழலாம்.


0 comments:
Post a Comment