மலேசியன் விமான சேவையின் பெயர் மாற்றப்படுகிறது?

மலேசிய விமானங்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாவதை தொடர்ந்து அதன் பெயரை மாற்ற மலேசிய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலேசிய விமானச் சேவைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், நான்கு மாத இடைவெளியில் விபத்திற்குள்ளானமை மலேசியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
MH 370 என்ற விமானம், 239 பயணிகளுடன் நடுவானில் காணாமல் போனது. இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 8ஆம் திகதி நிகழ்ந்தது. உலக நாடுகள் பல இணைந்து, அதீத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வான், தரை, கடல் என அனைத்து பகுதிகளிலும் தேடுதல் மேற்கொண்டபோதும், எவ்வித தடயமும் கிடைக்காது போனது. இந்த விமானம் குறித்து பல செய்திகளும் வதந்திகளும் நாளுக்குநாள் வந்துகொண்டுதான் உள்ளன.
இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக மலேசிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து அதிருப்தியுடன் அந்த விமானம் குறித்த பேச்சுக்கள் குறைய ஆரம்பித்தன. 239 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக, ஜூலை மாதம் 17ஆம் திகதி மற்றுமொரு மலேசியன் ஏர்லைன்ஸ் (MH 17) விமானம், 298 பயணிகளுடன் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்தபோது, உக்ரைன் வான்வெளியில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியாயினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
MH 370 விமானம் மாயமானதால் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்த மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனம் அதன் நற்பெயரையும் இழந்து வந்தது. நான்கு மாத இடைவெளியில் மற்றுமொரு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் அந்த நிறுவனம் மேலும் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
தற்போது மலேசியன் ஏர்லைன்ஸ் என்றாலே விமானப் பயணிகளுக்கு பீதி ஏற்படுகிறது. இதனால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கி, வருவாயை அதிகரிப்பதற்காகவே பெயரை மாற்றுவதற்கான புதிய உத்தியை மலேசிய விமான சேவை நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், புதிய பெயருடன், வெளிநாடுகளின் முதலீடுகளை திரட்டி, விமான நிறுவனத்தை நவீனப்படுத்த மலேசியா முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களுடன் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அதிகபட்ச முதலீட்டை மலேசிய அரசே வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment