படத்தின் லைனை மட்டும் சொன்னால் எந்தக் காலத்துக் கதை இது என்று எகத்தாளமாகக் கேட்பீர்கள். ஆனால், அதைச் சொல்லிய விதத்திலும், எடுத்துக் காட்டியிருப்பதிலும் மிரட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார்.
வெள்ளைக்காரன் ஆட்சியில் முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு வந்த ஒரு வெள்ளைக்காரர் தன் கேமராவினால் அந்த ஊர் மக்களைப் புகைப்படமெடுக்க, எதேச்சையாகக் கொள்ளை நோய் வந்து மக்கள் சாகிறார்கள். அதனால் காலகாலமாக யாரும் அந்த ஊருக்குள் புகைப்படம் எடுப்பதேயில்லை. ஒரு நிகழ்ச்சியைத் தவிர – அது இறந்தவர்களை மட்டும் படம் பிடிப்பது…
இன்னொரு கிளைக்கதையும் இதே கதைக்குள் இருக்கிறது. அதே முண்டாசுப்பட்டியினர் வழிபடும் தெய்வச்சிலையை ஒரு கொள்ளைக்காரன் திருடிக்கொண்டு போக முயற்சிக்கும்போது அதேபோல எதேச்சையாக விண்ணிலிருந்து வரும் ஒரு எரிகல், அந்தக் கொள்ளைக்காரனைத் தாக்குவதுடன், துள்ளிப்போய் கோவிலின் மூலஸ்தானத்தில் நின்று கொள்கிறது. அதையும் தெய்வசக்தியாகக் கருதும் மக்கள், அதற்கு ‘வான முனி’ என்று பெயரிட்டு வழிபட்டு வருகிறார்கள்.
இந்த முன்கதை(கள்?)யுடன் மண்டையைப் போடவிருக்கும் ஒரு பெரிசைப் படமெடுக்கும் அசைன்மெண்டோடு ஊருக்குள் வருகிறார் நாயகன் விஷ்ணு விஷால். பெரிசு மண்டையைப் போடும் நாள்வரை ஊருக்குள் இருக்கும் ஒரே லட்சணமான அழகி நந்திதாவை ‘லவ்’வ, அது என்ன ஆகிறது என்பது சுவாரஸ்யமான காட்சி நகர்த்தல்களில்…
விஷ்ணு விஷால் ரொம்பவும் மெனக்கெடாமல் நடிக்க முடிகிற இலகுவான கதை. எண்பதுகளின் நீள முடி, ஒரு காதல் பார்வை, அசட்டுச் சிரிப்பு – இவற்றுடன் பாத்திரத்தில் ஒட்டிக் கொள்கிறார். அவரால் படம் ஓடுகிறதோ இல்லையோ, ஓடுகிற படத்தில் அவர் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.
முதலில் முறைத்துக்கொண்டு திரிவதும், விஷ்ணு “ஐ லவ் யூ…” சொன்னதும் விலகி மறைவதும், ஒரு கட்டத்தில் விஷ்ணு முத்தமே தந்துவிட, பதறியபடி ஓடினாலும், அதே வேகத்தில் மீண்டும் வந்து பதில் முத்தம் தருவதிலும் ‘மண்சட்டியும், மீன் குழம்பும் போல்’ கிராமத்துப்பெண் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் நாயகி நந்திதா.
Mundasupattiஇளமையான ஹீரோயின் என்பதுடன் வித்தியாசமான வேடங்களும் ஏற்க வேண்டியிருந்தால் இயக்குநர்கள் தாராளமாக நந்திதாவை அணுகலாம். அப்படித்தான் படத்துக்குப் படம் அணுகிவருகிறார்கள் என்றே தோன்றுகிறது.
நவீன கால நாயகர்களின் நண்பனாக படத்துக்குப் படம் வரும் ‘காளி வெங்கட்’ இதிலும் அதே வேடத்தில் வருகிறார். அவர் கையில் வைத்திருக்கும் கேமரா பையைத் திறக்க முற்படும்போதெல்லாம் அந்த ஊர் ஜனங்கள் பம்முவது ஜோர்..!
பாரதிராஜாவின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டுப் ‘பிணமாகும்’ முனீஷ்காந்த் பாத்திரத்தில் வரும் நபர் “யார் இவர்..?” என்று பக்கத்து சீட்காரரைக் கேட்க வைத்துவிடுகிறார். அவர் ராமதாஸாம். ஆனால், அவர்தான் படத்தின் நாயகன் என்கிற அளவுக்கு அமர்க்களப்படுத்தியிருக்கிறார். இனி வரும் படங்களில் அவரை அலுக்கும் அளவுக்குப் பார்க்க முடியும்.
ரொம்ப நாள் கழித்து ஆனந்தராஜ். அதே வில்லனாக மீண்டும் வந்தாலும் புதிய பரிமாணத்தில் ரசிக்க வைக்கிறார். ஆண்மை விருத்திக்காக அவர் ‘பூனை சூப்’ சாப்பிடுவது, அதற்காகப் பூனைகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது, கடைசியில் பூனைகளாலேயே கடிபட்டுச் சாவது என்று அந்த எபிசோட் முழுக்க ‘காமிக்ஸ்’ வாடை. ஆனாலும், அவரையும் ரசிக்க முடிகிறது.
படத்தில் முகம் தெரியாத பல பெரிசுகளும் தொழில்முறை நடிகர்கள் போல் நடித்து அசத்தியிருப்பது இயக்குநரின் திறமையால் மட்டுமே. படம் முழுக்க நகைச்சுவையைப் பின்ன முடியாமல் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும், இன்டர்வெல்லுக்கு முன்பும், கிளைமாக்ஸுக்கு முன்பும் அரைமணிநேரம் அதிரி புதிரியாகக் களைகட்டியிருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் படத்தைத் தூக்கி ‘முண்டாசு’ கட்டி விடுகின்றன.
Mundasupatti‘ஷங்கர்’ ஒளிப்பதிவு அற்புதம். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனிக்க வைத்திருக்கும் ‘ஷான் ரோல்டனி’ன் ட்யூனில் இளையராஜா அங்கங்கே எட்டிப் பார்க்கிறார்.
படம் மனதில் ஒட்டிய அளவுக்கு படத்தின் கேரக்டர்கள் தலையில் அணிந்திருக்கும் ‘விக்’குகள் சரியாக ஒட்டவில்லை. படத்தில் நடித்திருக்கும் யாருமே பிஸியானவர்கள் இல்லை எனும்போது முடியைக்கூட வளர்க்காமல் அவர்களுக்கு அப்படி என்ன ‘தலைக்கு மேல்’ வேலை..?
முண்டாசுப்பட்டி – பரிவட்டம்..!

0 comments:
Post a Comment